வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாக கூறி, கேள்வித்தாளை சென்னை பிளஸ்2 மாணவர்கள் கிழித்தெறிந்த நிலையில், வேதியியல் தேர்வை சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் குமரி மாவட்டம் கருங்கல்லில் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பிளஸ்-2 தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தங்கள் வேதனையை தெரிவித்ததோடு, 100 மார்க் வருவதே கடினம்தான் என்றனர்.
இதற்கு முன், பள்ளி தேர்வுகளில் கேட்கப்படாத கேள்விகள் எல்லாம் வினாத்தாளில் இடம்பெற்றதாகவும், அதற்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்த நிலையில் வேதியியல் தேர்வை சரியாக எழுதாததால் மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தமிழகத்தில் நடந்துள்ளது.
குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள அழகாமணிநகர் பட்டவிளையை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகள் ஜெதர்சினி (17). வேலை காரணமாக ஜெயராமன் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வருகிறார். மாணவி ஜெதர்சினி அழகாமணி நகரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வேதியியல் தேர்வு முடிந்து ஜெதர்சினி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், இரவில் குளியல் அறைக்கு சென்ற அவர், மண்எண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது.
அப்போது வலிதாங்க முடியாமல் அலறிய ஜெதர்சினியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் மாணவி ஜெதர்சினி உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
வேதியியல் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு சென்ற மாணவி ஜெதர்சினி மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து அவரது பாட்டி கேட்டபோது, வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், தான் சரியாக தேர்வு எழுதவில்லை எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அப்போது அவரிடம், ‘மதிப்பெண் குறைந்தாலும் பரவாயில்லை, இதற்காக மனவேதனை அடைய வேண்டாம்’ என அவருடைய பாட்டி கூறி தேற்றி உள்ளார். ஆனாலும், ஜெதர்சினி ஆறுதல் அடையவில்லை. இதைத்தொடர்ந்து அவர் தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
No comments :
Post a Comment