மறைந்த நடிகர் கலாபவன் மணியின் உடலில் ஆபத்தான நச்சுப் பொருட்கள் இருந்ததாக மருத்துவக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அவருடன் மது அருந்திய நண்பர்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. தமிழில் ஜெமினி படத்தின் மூல அறிமுகம் ஆன இவர் பல படங்களில் நடித்துள்ளார். கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமையன்று தன்னுடைய பண்ணை வீட்டில் இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் ராமகிருஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கலாபவன் மணி மயங்கி விழுந்து அன்று, அந்த இடத்தில் அவருடன் மது அருந்தியவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முக்கியமாக, அவரும், கலாபவன் மணியின் குடும்பத்தாரும், அந்த பண்ணை விட்டிற்கு செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அந்த சந்தேகம் போலீசாருக்கும் வந்துள்ளது. அதையடுத்து கலாபவன் மணி மயங்கி விழுந்த அவரின் பண்ணை விட்டை யாரும் புகாவண்ணம் போலீசார் சீல் வைத்துள்ளார்கள்.மேலும், மணியின் உடலில் ஆபத்தான நச்சுத்தன்மையுள்ள அமிலம் இருந்தாதாக மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்துள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த கலாபவன் மணியின் மனைவி நிம்மி “என் கணவரை மருத்துவமனையில் சேர்த்த அடுத்த நாள்தான், அவரின் சகோதரர் எனக்கு தகவல் கொடுத்தார். என் கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. மேலும், அவருக்கு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. தன்னுடைய கடிமையான முயற்சியால் இந்த நிலையை அவர் அடைந்தார். உண்மை வெளியே வர வேண்டும்” என்று கூறினார்.
இதனையடுத்து, சம்பவம் நடந்த அன்று அவருடன் மது அருந்திய மூன்று நண்பர்களை போலீசார் தங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அதில், மலையாள தொலைக்காட்சியின் பிரபல நடிகர் சபுவும் ஒருவர்.
அவர் கூறும்போது “சம்பவத்தன்று, நான் எனது நண்பர் ஜாபர் இடுக்கியுடன் சாலக்குடிக்கு ஒரு படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன். நாங்கள் மணியை அவரின் பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினோம். அதன்பிறகு நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்” என்று கூறியுள்ளார்.
போலீசார் அங்கு விரைந்து செல்வதற்குள், அந்த இடத்தில் உள்ள தடயங்கள் அழிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
No comments :
Post a Comment