டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா நிர்ணயித்த 193 ரன் என்ற இலக்கை அதிரடியாக துரத்தி அபார வெற்றி பெற்றது மே.இ.தீவுகள் அணி. இந்திய அணியின் இந்த அதிர்ச்சி தோல்விக்கு பின்னர் கேப்டன் தோனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது கேப்டன் தோனி செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
ஆஸ்திரேலிய செய்தியாளர் ஒருவர் நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா என்று தோனியிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி, நான் ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா என செய்தியாளரை பார்த்து கேட்டார்.
பின்னர் அந்த செய்தியாளரை தோனி தன் பக்கம் வந்து உட்கார அழைத்தார். அவர் சற்றும் தயங்காமல் தோனியின் அருகில் போய் உட்கார்ந்தார். தோனி அந்த செய்தியாளரின் தோளில் கை போட்டு அவரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
இப்ப சொல்லுங்க நான் ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா என்று கேள்விகேட்டார் தோனி. இல்லை நான் சாதரணமாகத்தான் கேட்டேன் என செய்தியாளர் பதில் அளித்தார். தொடர்ந்து தோனி, நான் நல்ல உடல் கட்டமைப்புடன் இருக்கிறேனா, வேகமாக ஓடுகிறேனா என கேள்விகேட்டார். கண்டிப்பாக, நீங்கள் மிகவும் வேகமாக ஓடுகிறீர்கள் என செய்தியாளர் பதில் அளித்தார்.
அடுத்த கேள்வியாக 2019 உலகக் கோப்பை தொடர் வரை நான் நல்ல முறையில் விளையாட முடியுமா என்று கேட்டார் தோனி. அதற்கு பதில் அளித்த செய்தியாளர், நிச்சயமாக நீங்கள் தொடர வேண்டும் என்றார். உடனே தோனி முதலில் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் இது தான் என கூறினார். தோனியின் இந்த பதிலை கேட்டு கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர்.
No comments :
Post a Comment