மாற்றுக் கருத்து கூறுவோரை அதிமுக அரசு அடக்கி ஒடுக்குகிறது - ஸ்டாலின் கண்டனம்

Share this :
No comments


மாற்றுக் கருத்து கூறுவோரை எப்படி அதிமுக அரசு அடக்கி ஒடுக்குகிறது என்பதற்கு இப்போது ராமு மணிவண்ணன் மீது எடுக்கப்பட்டுள்ள "துறைத் தலைவர் பதவி நீக்கம்" என்பது ஒரு உதாரணம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை பல்கலைகழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை தலைவர் பதவியிலிருந்து பேராசிரியர் ராமு மணிவண்ணன் திடீரென்று நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ”மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க மறுத்ததால் துறை தலைவர் பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளேன்" என்று பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறியிருக்கிறார்.

இப்படி அவரை சென்னைப் பல்கலைக்கழகம் மனரீதியாக துன்புறுத்தி, சட்டத்திற்குப் புறம்பாக அச்சுறுத்துவது முதல் தடவை அல்ல. "இலங்கைக்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் போகக் கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய ஒரே காரணத்திற்காக கடந்த மார்ச் மாதம் பேராசிரியர் ராமு மணிவண்ணன் பல்கலைக்கழக துணை வேந்தரின் கோபத்திற்குள்ளாக நேர்ந்தது.

அதன் விளைவாக, பேராசிரியர் ராமு மணிவண்ணனை மூன்று மணி நேரங்களுக்கு மேலாக காவல் நிலையத்தில் அடைத்து வைத்ததோடு மட்டுமின்றி, அவர் மீது சென்னை பல்கலைக்கழகம் மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்தது. ஜனநாயகப் பண்பாட்டினை யொட்டி மாற்றுக் கருத்து கூறுவோரை எப்படி அதிமுக அரசு அடக்கி ஒடுக்குகிறது என்பதற்கு இப்போது அவர் மீது எடுக்கப்பட்டுள்ள "துறைத் தலைவர் பதவி நீக்கம்" என்பது ஒரு உதாரணம்.

புதிய கருத்துக்களையும், கண்டிபிடிப்புகளையும் கொடுக்க வேண்டியதுதான் கல்வியாளர்களின் தலையாய பணி. இந்நிலையில் இது போன்ற அதிமுக ஆதரவு நடவடிக்கைகள் மூலம் சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர், கல்வி நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்க முனைகிறார்.

கல்வியாளர்களை அடக்கி, அவர்களின் கருத்துக்களுக்கு தடை விதித்து, அச்சுறுத்தி ஆக்கரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமுதாயம் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்லும் சமுதாயமாகத் தான் இருக்க முடியும். ஆகவே பேராசிரியர் ராமு மணிவண்ணன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments :

Post a Comment