படுகொலை செய்யப்பட்ட சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுப்பதாக சொல்லியும் என் மகளை விடவில்லை என்றும் அதற்கு பிறகுதான் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்கர கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை [13-03-16] உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதில், படுகாயமடைந்த அவரது மனைவி கவுசல்யா தலையில் பலத்த காயங்களுடன் கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, சங்கர் படுகொலை செய்யப்பட்டதற்கு மறுநாள் [14-0316]தனியார் பத்திரிக்கையாளரிடம் பேசிய அவரது மனைவி கவுசல்யா, “நான் சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களது திருமணத்துக்கு ஆரம்பம் முதலே எனது தந்தை சின்னசாமி மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து வாழ்ந்து வந்தோம்.
எனது கணவரை பிரிந்து வரும்படி என்னை உறவினர்கள் நிர்ப்பந்தித்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு என் தந்தையும், தாயும் என்னை தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் என் கணவர் சங்கரை பிரிந்து தங்களுடன் வந்துவிடுமாறு கூறினர்.
நான் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வந்தால் என் கணவருடன் தான் வருவேன். இல்லையெனில் வரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன்.
அதற்கு என் பெற்றோர் உன் கணவர் சங்கரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளோம். நீ எங்களுடன் வந்து விட்டால் அவனது உயிரை பறிக்க மாட்டோம். இல்லையெனில் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து 14ஆம் தேதி அன்றே கெளசல்யாவின் தந்தை சின்னசாமி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் செய்துகொண்டது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. எனது மகளின் மேல் எனக்கு ரொம்ப பாசம் அதிகம். அதனால், எப்படியாவது வந்துவிடு என்று கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். எதுவும் நடக்கலை.
அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கின்றேன். நீ வாங்கிகொண்டு போய்விடு. என் பொண்ணை எங்களிடம் விட்டுவிடு என்று சொன்னேன். அவனும் கேட்கவில்லை. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று சின்னசாமி கூறியதாக தெரிவித்துள்ளனர்.
No comments :
Post a Comment