நெல்லையில் 25–ந்தேதி தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்: பிரேமலதா பேசுகிறார்

Share this :
No comments


நெல்லை, மார்ச் 21–

தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோல மக்கள் நல கூட்டணியிலும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காஞ்சீபுரத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்றும், தே.மு.தி.க. தலைமையை ஏற்று கூட்டணியில் இணைபவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்றும் விஜயகாந்த் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் சில அரசியல் விமர்சகர்கள் தே.மு.தி.க கட்சி, தி.மு.க. அல்லது பா.ஜனதாவுடன் சேரும் என்றே கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 25–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லையில் தே.மு.தி.க. சார்பாக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரேமலதா கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று பேசுகிறார்.

தேர்தலில் கூட்டணி வியூகம் பலரும் பேசி வரும் நிலையில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க கூட்டம் நடத்துவதால், வருகிற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவது உறுதியாகி விட்டது என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக்காட்ட நெல்லை தே.மு.தி.க. பிரமுகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக பாளை மார்க்கெட் மைதானம் மற்றும் டவுனில் கூட்டம் நடத்த தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

எந்த இடத்தில் அனுமதி கிடைக்கிறதோ அங்கு மற்ற கட்சிகள் வியக்கும் வண்ணம் கூட்டம் நடத்தி தங்கள் பலத்தை காட்ட முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டம் முடிந்ததும் மறுநாள் 26–ந்தேதி நாகர்கோவிலும், அதைத்தொடர்ந்து தூத்துக்குடியிலும் கூட்டம் நடத்தி அங்கும் பிரேமலதா பேச ஏற்பாடு நடந்து வருகிறது.

No comments :

Post a Comment