புகழ் - திரைவிமர்சனம்
ஜெய் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த திரைப்படம் ‘புகழ்’. உதயம் NH4 இயக்குனர் மணிமாறனின் அடுத்த படைப்பு தான் புகழ். ஜெய் நாயகனாகவும், சுரபி நாயகியாகவும் மேலும் கருணாகரன், ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் நடித்துள்ளனர்.
அரசியலை மையமாக வைத்து அநியாயத்தை தட்டிக்கேட்கும் இளைஞனாக நடித்திருக்கிறார் ஜெய். காதல், சாது, ரொமாண்டிக் சாக்லெட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜெய், அநியாயத்தை தட்டிக் கேட்கும் தைரியமான இளைஞனாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
சிறு வயதில் இருந்து விளையாடி வரும் மைதானத்தை கைப்பற்றி பில்டிங் கட்ட துடிக்கும் அரசியல்வாதியுடன் மல்லு கட்டும் ஜெய் அதற்கு தடையாக இருக்கிறார். அரசியல்வாதியின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் தனது மைதானத்தை மீட்கிறாரா என்பதே படத்தின் கதை.
காதல், கதாநாயகி போன்றவை கமர்ஷியல் நோக்கத்திற்காக படத்தில் சேர்க்கப்பட்டது போல் உள்ளது. திரைக்கதை அமைப்பதில் இயக்குனர் சற்று தடுமாறி இருக்கிறார். குருவி படத்தில் இடம்பெற்ற தேன் தேன் பாடல் இப்படத்தில் இடம்பெறுவது விஜய் ரசிகர்களுக்கு ஆட்டம் போட வைத்துள்ளது.
அரசியலை மையமாக வைத்து நகரும் இந்த படத்தில் சில அழுத்தமான வசனங்களை இயக்குனர் வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல்களில் பெரிதாக சொல்லும் அளவுக்கு இசை அமைக்காத விவேக்-மெர்வின் இணை பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு தனி ரகம். அண்ணனாக வரும் கருணாஸ் நடிப்பில் அசத்தி இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் இந்த திரைப்படம் ஜெய்யை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெய் வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தில் பார்க்கப்படுகிறார்.
திரைக்கதையை கொஞ்சம் தடுமாற்றம் இல்லாமல் அமைத்திருந்தால் புகழ் உச்சத்திற்கு சென்றிருக்கும். காதல், நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு கட்டாயம் வேண்டும் என்பதற்காக திணிக்கப்பட்டது போல் உள்ளது.
திரைக்கதையில் தடுமாற்றம் இருந்தாலும் படத்தின் கதையும், ஜெய்யின் கதாபாத்திரமும் ரசிகர்களை இருக்கையில் அமர்த்தியுள்ளது. இந்த படம் நிச்சயம் ஜெய்யின் சினிமா பயணத்தை மெருகேற்றும்.
மொத்தத்தில் புகழ் ‘ஜெய்-க்கு புகழ்’
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment