ஏரியில் சவுடு மணல் அள்ளியதே வெள்ளப் பெருக்கிற்கு காரணமா?: நீதிமன்றத்தில் நடந்த வழக்கு

Share this :
No comments


நேமம் ஏரியில் நடந்த மணல் கொள்ளையால்தான் சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இது குறித்து சென்னையைச் சேர்ந்த சி.எம்.துரை ஆனந்த் என்பவர் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட நேமம் கிராமத்தில் 750 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பிவிட்டால், கிருஷ்ணா நதி நீர் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இந்நிலையில், நேமம் ஏரியை ரூ.79.50 கோடியில் தூர்வார 2011 இல் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. அதன்படி, 2.45 மீட்டர் ஆழத்துக்கு, 20,286 லாரி லோடுகள் சவுடு மணல் அள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

ஆனால், 3.45 மீட்டர் ஆழத்துக்கு சவுடு மணல் அள்ள பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியது. இந்நிலையில், விதிமுறைகளுக்கு எதிராக 10 மீட்டர் ஆழம் வரை சவுடு மணலை அள்ளி, சுமார் 7 லட்சம் லாரி லோடுகள் மணலை எடுத்துச் சென்றதால் ஏரியின் கரை பலவீனமானது.

ஓரிடு மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் நிரம்பிய இந்த ஏரியின் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றடைந்தது. பின்னர் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், சென்னை மாநகரத்துக்குள் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்காணோர் இறந்துள்ளனர்.

எனவே, சட்டவிரோதமான மணல் அள்ளப்பட்டது குறித்து, விசாரிக்க ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க தலைமைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாதித்த நீதிபதிகள் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு:-

மனுதாரர் போக்குவரத்து தொழில் செய்பவர். இவர் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்த விஷயங்களை அறிந்திருப்பதாக தெரியவில்லை. எனவே, அவரது மனுவை நிராகரிக்கிறோம்.

இந்த வழக்கில் அவர் எழுப்பியுள்ள விஷயங்கள் முக்கியமானவை. இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனுவின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இந்த வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை ஏப்ரல் 13 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறினர்.

No comments :

Post a Comment