திமுகதான் ஓடுகிற வண்டி; மற்ற கட்சிகள் ஓடாத வண்டி - இமான் அண்ணாச்சி தாக்கு
திமுகதான் ஓடுகிற வண்டி, மற்ற கட்சிகள் ஓடாத வண்டி. ஓடுகிற வண்டியான திமுகவில் நான் ஏறிக்கொண்டேன் என்று இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அகரம் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இமான் அண்ணாச்சி, ‘’நான் தூத்துக்குடியில் இருந்து நகைச்சுவை நடிகராகி விருதுகள் பெற வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். நிறைய இடங்களில் வேலை பார்த்து பிறகு டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தி இப்போது நடிகராகவும் ஆகிவிட்டேன்.
சமீபத்தில் சென்னையில் பெருமழை பெய்து வீடுகள் மூழ்கியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உணவுகள் வழங்கினேன். திமுக தொண்டர்களும் உதவி செய்தார்கள். மக்கள் பட்ட கஷ்டங்களை அவலங்களையும் வெளிப்படுத்தி ஒரு நல்லாட்சி வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் திமுகவில் சேர்ந்தேன்.
எனக்கு தெரிந்த வரையில் நல்ல கட்சி திமுகதான். இந்த கட்சியால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். சிறு வயதில் இருந்தே எனக்கு திமுக தலைவர் கலைஞரை பிடிக்கும். திமுகதான் ஓடுகிற வண்டி, மற்ற கட்சிகள் ஓடாத வண்டி. ஓடுகிற வண்டியான திமுகவில் நான் ஏறிக்கொண்டேன்.
அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரே முழக்கம்தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். நிறைய பேர் நான்தான் முதல்வர் என்கின்றனர். அவர்கள் ஆசைகள் பலிக்காது. தமிழகத்தை நல்வழிப்படுத்தும் ஒரே தலைவர் கலைஞர் அவர்தான் முதலமைச்சர் ஆவார்” என்று கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment