அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு? - கண்கட்டும் வித்தை : கருணாநிதி

Share this :
No comments


அதிமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையிலே அறிவிப்பார்களானால், அது “கண்கட்டும் வித்தை” அறிவிப் பாகத்தான் இருக்கமுடியும் என்று கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று 21-7-2015 அன்று நான் அறிவித்தேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள் கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று 3-8-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அவ்வாறே ஆர்ப்பாட்டங்களும் வெற்றிகரமாக தமிழகமெங்கும் நடைபெற்றன.

இந்த மதுவிலக்குப் பிரச்சினை பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் சிலர் பொத்தாம்பொதுவில், திமுக ஆட்சியிலே இருந்தபோது தானே, மது விலக்கை ரத்து செய்தது. எனவே திமுகதான் எல்லாம் கெட்டுவிட்டது என்ற ரீதியில் உள்நோக்கத்தோடு, ஏற்கனவே அரசியல் காரணத்திற்காகச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதையே உறுதி செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

திமுக ஆட்சியில் மது விலக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்றாலும், அப்போதே நான் கூறியிருக்கிறேன்; இதனை திமுக முழு மனதோடு கொண்டு வரவில்லை என்றும், அப்போதுள்ள தமிழகத்தின் நிதி நிலைமை தான் அதற்குக் காரணம் என்றும் பல முறை விளக்கியிருக்கிறேன்.

மதுவிலக்கை ஒத்தி வைத்து தமிழகச் சட்டப்பேரவையில் நான் உரை நிகழ்த்தும்போதுகூட கூறியது என்ன?

“புனித நோக்கத்துடன் இந்தியப் புவி முழுவதும் எந்தக் கொள்கை விரிவாக்கப்பட வேண்டுமென்று காந்தியடிகள் கூறினாரோ, அந்தக் கொள்கை அவர் ஏந்திய கொடி நிழலில் அணி வகுத்து நின்ற அவர்தம் தானைத் தளபதிகளாம் மாநில முதல்வர்களாலேயே பின்பற்ற முடியாமல் போனது மட்டுமல்ல; மத்திய அரசினை நடாத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும்.

கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்று சட்டப்பேரவையில் பேசினேனே தவிர, மனச்சாட்சி இடம் கொடுக்காத நிலையில்தான் மதுவிலக்குச் சட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தேன்.

29-6-1971 அன்று நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்குப் பதிலளித்து நான் உரையாற்றும் போது “மாண்புமிகு உறுப்பினர்களின் - தோழமைக் கட்சி நண்பர்களின் உணர்ச்சியை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களில் சிலபேர் என்னைக் கெஞ்சிக்கூடக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்றாடிக் கேட்பதாகக்கூடச் சொன்னார்கள். அவர்களை எல்லாம்விட நான் வயதிலே சிறியவன். அப்படி மன்றாடிக் கேட்டதை, கெஞ்சிக் கேட்டதைத் தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை என்ற காரணத்தால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். அதுவும் ஒத்தி வைத்திருக்கிறோம் என்றுதான் கூறியிருக்கிறோம்” என்றுதான் கூறினேன்.

1971இல் திமுக அரசு; கள், சாராயக் கடைகளைத் திறந்தது என்றாலும், 1974இல் - திமுக ஆட்சிக் காலத்திலேயே, மீண்டும் மதுக் கடைகளை மூடி, மது விலக்கை நடைமுறைப்படுத்தியது. திறந்ததை மறக்காமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், மூடியதை மட்டும் வசதியாக மூடி மறைப்பது சரிதானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒத்தி வைப்பது என்பது மீண்டும் நடைமுறைக்கு வரும் என்ற அடிப்படையில்தானே? திமுக ஆட்சிக் காலத்திலேயே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது.

அதற்குப் பிறகு வந்த அதிமுக ஆட்சியிலே என்ன செய்தார்கள்? திமுக ஆட்சியிலே கொண்டு வந்த மதுவிலக்கு ரத்து என்பது, திமுக ஆட்சியிலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டு, மதுவிலக்கு நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை, உண்மை.

ஆனால், 1981இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மீண்டும் கள், சாராய விற்பனைக்காக, மது விலக்கை ரத்து செய்தார். இந்த உண்மையை ஒரு சிலர் உரக்கச் சொல்வதில்லை; காரணம் அதிமுக ஆட்சி என்றாலே ஏற்படும் அச்சம்!

2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசே மதுவிற்பனைக்காக “டாஸ்மாக்” நிறுவனத்தைத் தொடங்கி, அரசே ஊருக்கு ஊர் மது விற்பனைக் கடைகளைத் திறந்தது. முக்கியமான இந்தத் தகவலையும் ஒரு சிலர் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைத்திட முயற்சிக்கிறார்களே தவிர, மனசாட்சிக்கு ஊறு விளைவிக்காமல் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

இதே ஆண்டு, ஜனவரியில் தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றபோது, “மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்கிறோம்” என்று “மிடாஸ்” அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலங்களைப் பின்பற்றி படிப்படியாகவாவது, மதுவிலக்கை அமல்படுத் துமாறு மிகுந்த கவலையோடு கேட்டுக் கொண்டபோது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதற்கும் மறுத்து விட்டார்.

ஆனால் தற்போது தேர்தல் வருகிறது என்றதும், மதுவிலக்குக் கொள்கையை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டுவராத நிலையிலேயே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையிலே அறிவிப்பார்களானால், அது பாமர மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் “கண்கட்டும் வித்தை” அறிவிப் பாகத்தான் இருக்கமுடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment