வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி, ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்து மோசடி செய்த நபரைப் பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது.
மதுரையின் சில பகுதிகளில் வசிக்கும் சிலரிடம், ரா. நடராஜன் என்பவர் அறிமுகமாகி, அவர்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்வதாக கூறி தலா ஒருவருக்கு ரூ. 99 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ 19,68,000 வாங்கியுள்ளார்.
ஆனால், கூறியது போல் அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. அவர்கள் கேட்கும்போது, சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்துள்ளார். ஒருகட்டத்தில் அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். ஆனால் நடராஜன், அவர்களை மிரட்டும் தோனியில், ஐக்கிய மனித உரிமைகள் கழகத்தின் தலைவர் என்ற விசிட்டிங் கார்டு கொடுத்துள்ளார். மேலும் தான் தமிழ் மாநில சிவசேனா கட்சியின் மாநில தலைவர் என்றும் கூறி, அவர்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியாது என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள். போலீஸ் நிலையம் வந்த நடராஜன், விரைவில் அந்தப் பணத்தை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தார். ஆனால் கூறியது போல் அவர்களுக்கு பணத்தை திருப்பித் தரவில்லை.
இதுவரை மூன்று புகார்கள் வரை அவர்கள் போலீசாரிடம் கொடுத்து விட்டார்கள். ஆனால் நடராஜன் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால், போலீசார் அவர்களின் புகாரை வாங்க மறுப்பதாக தெரிகிறது. 100 முறைக்கும் மேல் காவல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை. நடராஜன் பலரை இப்படி ஏமாற்றியுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தன்னுடைய அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, தன்மீது போலீசார் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால், நடராஜன், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இருப்பதோடு, பணத்தைக் கேட்டால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி வருகிறார்.
தன்னுடைய தவறை காவல்நிலையத்தில் அவர் ஒத்துக் கொண்டும், இதுவரை நடராஜனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீசார் பயப்படுவது, பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
No comments :
Post a Comment