ஜெயலலிதாவை எதிர்த்து அன்புமணி ஆர்.கே.நகரில் போட்டியா?
இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், எனக்கும் தான் போட்டி. மதுவை ஒழிக்க என்னால் மட்டும் தான் முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள் என்று பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், “பாமகவின் செயல்திட்டங்கள் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரைவு தேர்தல் அறிக்கை முதல் பாகம் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை பாமக தேர்தல் அறிக்கையின் 2ஆவது பாகம். தற்போது இறுதி பாகம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுவிலக்கிற்காக டாக்டர் ராமதாஸ் 26 ஆண்டுகளாக போராடி வருகிறார். தற்போது, 100 சதவீதம் கட்சிகளும் இன்று மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிறது. எதை செய்தாலும் பாமக முன்னோடியாக இருக்கிறது. மற்ற கட்சிகள் பாமகவை பின்பற்றுகின்றன.
கடந்த மாதம் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொன்ன ஜெயலலிதாவும், அவருடைய அமைச்சர்களும், இன்றைக்கு படிபடியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்கிறார்கள். தேர்தல் பயத்தில் மதுவிலக்கு பற்றி ஜெயலலிதா பேசுகிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசின் எல்லாத்துறைகளின் கடந்த 10 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கும், எனக்கும் தான் போட்டி. மதுவை ஒழிக்க என்னால் மட்டும் தான் முடியும் என்று பெண்கள் நம்புகிறார்கள்” என்று கூறினார்.
உடனே நிருபர்கள், அப்படி என்றால் நீங்கள் ஆர்.கே.நகரில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என்று கேட்டதற்கு, ‘நான் தேர்தலை சொல்கிறேன். தொகுதியை அல்ல. நான் போட்டியிடும் தொகுதி 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்’ என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பதிலளித்தார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment