நிம்மதி இழந்து நிற்கிறேன் : சூப்பர் சிங்கர் ஆனந்த் குமுறல்

Share this :
No comments


சினிமா பின்னனிப் பாடகரான ஆனந்த் அரவிந்தாக்‌ஷனை, சூப்பர் சிங்கராக விஜய் டிவி தேர்வு செய்ததாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுபற்றி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தன்னுடைய முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

நான் சுப்பர் சிங்கர் பட்டம் பெற்றதை, கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கிறேன்.

எனக்கு ஆதரவு அளித்தவர்களையும் விஜய் தொலைக்காட்சியையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இந்த என்னுடைய வெற்றி என்பதை நான் எளிதாக அடைந்துவிடவில்லை. இதற்கு முன் பாடியிருக்கிறேன் தான். ஆனால் பின்னணி பாடகர் என்றால் ஒரு பாடல் பாடியவரையும் அப்படித்தான் சொல்கிறோம் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி சாரையும் அதே பெயரில் தான் அழைக்கிறோம். என்ன செய்வது? இதற்கு முன்னர் பாடியிருக்கேன் என்பது அத்தனை பெரிய குற்றமா?

நான் இதற்கு முன் பாடியிருக்கிறேன் என்பதை என்றுமே மறைத்ததில்லை. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் என்னைப் பற்றிய முழு விபரங்கள் இப்போதும் உள்ளது. மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அதையெல்லாம் என்றோ அழித்திருப்பேன் அல்லவா? தவிர என்னுடன் பாடியவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் நான் பாடகன் என்று தெரியும். அவர்கள் ஒருவரும் இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதே இல்லை. தமிழகத்தின் பிரம்மாண்டக் குரல் தேடல் என்பதால் முன்பு பாடியிருக்கவே கூடாது என்று விதிமுறையில் நிச்சயமாக இல்லை.

என்னுடைய இந்தப் பாதையும் பயணமும் அத்தனை எளிதாக நான் கடந்து வந்ததல்ல. பாடல் பதிவு அரங்கில் பாடுவதற்கும் நேரலையான இத்தகைய நிகழ்ச்சியில் பாடுவதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. மிகக் கடின உழைப்பும் இதற்குத் தேவை. நான் அப்படித்தான் ஒவ்வொரு முறையும் தேவையான பயிற்சியுடன் தான் வந்து பாடினேன். அதன் பிறகே இந்த வெற்றி சாத்தியமானது. பத்து வருட போராட்டத்துக்குப் பின் ஒரு சிறிய நம்பிக்கையின் ஒளி என் பாதையில் தென்பட்ட போது அதை நான் பின் தொடர்ந்தேன். அது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.

ஆனால், என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில், 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று, ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறேன். எதற்காக இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேனோ!.

இதற்கு முன் என்னை நேசிக்க இத்தனை அதிகம் பேர் இருந்ததில்லை.அதேபோல், என்னை வெறுக்கவும் அதிகம் பேர் இருக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment