அதிமுக கவுன்சிலர் தற்கொலை: விசாரணை நடத்த கருணாநிதி கோரிக்கை

Share this :
No comments


மதுரை அதிமுக கவுன்சிலர் முத்துராஜா தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற புகழ்ப் பெயர் மறைந்து, அதிமுக ஆட்சியில் “தற்கொலைகள் பெருகும் தமிழ்நாடு” என்ற அவப்பெயர் தலை குனிவை ஏற்படுத்துகிறது.

2014ஆம் ஆண்டு - மொத்த தற்கொலை என்ற கணக்கைப் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாவது இடத்திலும் இருந்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் அதிகாரிகள் தற்கொலையும் பெருகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாகத் தான் நேற்றையதினம் மதுரையில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அவர் வரும் சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனக்கும், தன் கட்சித் தலைவியான ஜெயலலிதாவுக்கும் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஆனால் அதிமுகவின் பாரபட்சமான - அரைகுறை நேர்காணலுக்கு தன்னை அழைக்கவில்லை என்ற வேதனை மற்றும் விரக்தியின் காரணமாக, தன் பெயர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் போய் விடுமோ என நினைத்து, மன அழுத்தம் மிகுந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் ஏடுகளிலே வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி யாக உள்ளது. மேலும், தான் வேட்பாளராக நிற்பதற்காக அவர் இலட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து விட்டாரா என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் செய்திகளும் வருகின்றன.

தேர்தலில் போட்டியிட "சீட்" வாங்கித் தருவதாகச் சொல்லிப் பலரிடமும் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்து விட்டார்கள் என்று அதிமுக அமைச்சர்களைப் பற்றி வருகின்ற பத்திரிகைச் செய்திகள் இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு அடிப்படையான ஆதாரமாக இருப்பதால், தற்கொலை செய்து கொண்டு மாண்ட அதிமுக கவுன்சிலர் முத்துராஜாவின் மறைவு குறித்து ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக, சட்டப்படி உரிய விசாரணையை விரைவாக நடத்திட வேண்டும். இப்படிப்பட்ட தற்கொலை களுக்குக் காரணம் யார் என்பதையும் கண்டறிந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment