5 கட்சிகள் நடத்தும் அறப்போரை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம்: வைகோ
மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மதிமுக உள்ளிட்ட 5 கட்சிகள் நடத்தும் அறப்போரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்தியாவை ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் ஜனநாயக உரிமைகளை நசுக்க முற்பட்டு ஏவி விடுகிற மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய ஐந்து இயக்கங்களின் கூட்டமைப்பான மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், 13 ஆம் தேதி மாலை 4 மணி அளவில், சென்னை, மதுரை, தஞ்சாவூர், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய 5 நகரங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற உள்ளது.
இந்த அறப்போரில் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் சென்னை மாநகரில் நடைபெறும் அறப்போரில் பங்கேற்கிறார்கள்.
மக்கள் சக்தியின் வலிமையை மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு அறப்போர் உணர்த்திடும் விதத்தில் அறப்போரை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment