முதல்வர் ஜெயலலிதா-பிரதமர் மோடி சந்திப்பை விமர்சனம் செய்தவர்களுக்கு எச்.ராஜா கடும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சந்திப்பு குறித்து விமர்ச்சித்துவரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை வன்மையாக கண்டிக்கிறேன். இளங்கோவன் தனது அநாகரீகமான பேச்சை திரும்பப்பெற வேண்டும் என்று பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
காரைக்குடியில் இன்று பத்திரிக்கையாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் பாஜக 2011 இல் அதாவது 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என நடத்தி தமிழகத்தில் பூரணமதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று போராடிவருகிறது.
திமுகவுக்கு திடிரென ஞானோதயம் ஏற்பட்டிருப்பதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 1971 இல் கொட்டும் மழையில் ராஜாஜி கருணாநிதியின் வீட்டுக்குச்சென்று கையைப் பிடித்துக் கெஞ்சியும் கருணாநிதி அரசுக்கு நிதி தேவைப்படுகிறது என்று கூறி மதுவிலக்கை ரத்து செய்தார். இப்போது மலவிலக்கு கோருபவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வார்கள். இருப்பினும் சசிபெருமாள் போன்ற தனிமனிதர் போராட்டங்கள், பாஜகவின் போராட்டங்கள் போன்றவைகளால் தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனால் மதுவிலக்கு குறித்து தமிழக மக்கள் பாஜகவுக்கு முழு ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.
தமிழக முதல்வர், பிரதமர் சந்திப்பு குறித்து காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கள்ள உறவு என்றெல்லாம் பேசியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தனது பேச்சை திரும்பப்பெற வேண்டும். பிரதமர் தமிழகத்திற்கு ஆக.7 இல் வந்து சென்றது, தேசிய கைத்தறி தினவிழாவிற்காக. ஆகஸ்ட் 7 இல் தான் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. பிகாருக்கும், மேற்குவங்கத்திற்கும் பிரதமர் சென்ற போது அந்தந்த மாநில முதல்வர்கள் வரவேற்றார்கள். பிரதமரை வரவேற்பது இயற்கையான ஒன்று. அதுபோன்றதுதான் தமிழக முதல்வர், பிரதமர் சந்திப்பு. இதனை தவறாக பேசிவருகிறார்கள்.
அதேபோன்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியில் எந்தவித பொறுப்பிலும் இல்லாதவர். பாஜக தாங்கள் விரும்பிய கட்சியோடு கூட்டணி அமைக்கும். இதில் மூக்கை நுழைப்பதற்கு சிதம்பரத்திற்கு எந்தவித உரிமையும் இல்லை. பாஜக எப்போதும் வெளிப்படையாக அறிவித்துத்துதான் செயல்படுத்தும். காங்கிரஸ் போன்று கள்ளத்தனமாக செயல்களை நடத்தும் ஆள்கள் நாங்களல்ல. கருணாநிதியை சிதம்பரம் மறைமுகமாக பார்கலாமா?. கள்ளத்தனமாக வெற்றிபெற்ற ஒருவர் கள்ளஉறவு என்றெல்லாம் ப.சிதம்பரம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கூட்டணி பேசுவதற்காகத்தான் பிரதமர் தமிழகத்திற்கு வந்தார் என்று சொல்வது சரியல்ல. தமிழகத்தின்மீது பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டவர். அதேபோல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக முதல்வர் பல கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு பேசுவதற்கு வேறு எதுவுமில்லை என்பதால் திசை திருப்பும் வகையில் பேசுகிறார்கள் என்று கூறினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment