வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஜெயலலிதா இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
கோடை வெயிலால் பிரச்சார கூட்டத்திற்கு வருகிற மக்கள் அவதிபடுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்றை தேர்தல் பரப்புரையை மாலை வேளையில் ஆரம்பித்தார் ஜெயலலிதா. கடந்த சில தேர்தல் பரப்புரையை விட இந்த காஞ்சிபுர தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா சற்று ஆவேசமாகவே காணப்பட்டார்.
கடந்த நாட்களில் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த அனல் பறக்கும் பேச்சு இந்த தேர்தலில் இல்லையென பொதுவாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதாவின் பேச்சில் அந்த பழைய அனல் பறக்கும் பேச்சு தென்பட்டது. இந்த பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக விளாசி தள்ளினார் ஜெயலலிதா.
இன்றையை பிரச்சாரத்தில் ஜெயலலிதாவின் பேச்சின் சில துளிகள்:
பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் நிறைவேற்ற முடியாது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். பூரண மதுவிலக்கு அதிமுக ஆட்சியில் மட்டுமே நிறைவேற்ற முடியும் என கூறினார் ஜெயலலிதா.
அரசு மதுக்கடைகளை மூடிவிட்டு தனியார் கிளப்புகளில் மது விற்க திட்டமிடுகிறார் கருணாநிதி. பூரண மதுவிலக்கு பற்றி பேசும் கருணாநிதி, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் என கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.
2006-இல் கொடுக்கப்பட்ட பல வாக்குறுதிகளை மீண்டும் 2016-இல் திமுக கொடுப்பது ஏன்?
திமுக தேர்தல் அறிக்கையில் 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று சொன்ன திமுக அதை நிறைவேற்றியதா?
மதுரையில் தினகரன் நாளிதழ் பத்திரிகையாளர்கள் எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது தெரியாதா? மேலும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கல்லாமல், தன் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தவர் கருணாநிதி.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசு. இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் கடந்த திமுக அரசு. சினிமா துறையை கபளீகரம் செய்தது கடந்த திமுக அரசு.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் துரோகம் செய்தது கடந்த திமுக அரசு என திமுகவின் கடந்த கால ஆட்சியை குறிப்பிட்டு விளாசி தள்ளினார் ஜெயலலிதா.
மேலும் பொன்னேரில் தொழில் முனைய அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தண்டலையில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 11 லட்சத்து 49 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு செய்த பணிகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது என அதிமுக அரசின் சாதனைகளையும் குறிப்பிட்டு பேசினார் ஜெயலலிதா.
No comments :
Post a Comment