எங்களுக்கே கவலை இல்லை; உங்களுக்கு என்ன? - திருமாவளவன் கேள்வி
தேமுதிக அணி - மக்கள் நலக் கூட்டணி அணி என்று அழைத்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கவுரவப் பிரச்சனையும் இல்லை. அதைப்பற்றி நாங்களே கவலைப்படாத போது வேறு யாரும் கவலைப்பட வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், ”தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி திங்கட்கிழமை நாகர்கோவிலில் பிரச்சார பொதுக்கூட்டத்தை துவக்குகிறோம். சிலர் காழ்ப்புணர்ச்சியோடு இந்த கூட்டணிக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை முன் வைக்கிறார்கள்.
மக்கள் நலன், நாட்டு நலனை கருத்தில் கொண்டு ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு, கூட்டணி ஆட்சி என்ற மூன்று பிரதான விசயங்களை முன்வைத்து தேமுதிகவோடு மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளது.
தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் விமர்சனத்தை பொருட்படுத்தாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். மேலும் சில கட்சிகள் இந்த கூட்டணியோடு இணையும் வாய்ப்பு உள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை விரைவில் ஒருங்கிணைப்பாளர் வைகோ வெளியிடுவார்.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 124 இடங்களில் அவரது அணியில் இணையும் கட்சிக்கு அவர் தொகுதி ஒதுக்கீடு செய்வார். மக்கள் நலக் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மக்கள் நலக் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 110 இடங்களில் இருந்து தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேமுதிக அணி- மக்கள் நலக் கூட்டணி அணி என்று அழைத்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கவுரவப் பிரச்சனையும் இல்லை. அதைப்பற்றி நாங்களே கவலைப்படாத போது வேறு யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த திருமாவளவன், “அதிமுகவின் பி டீம்’’ என்று மக்கள் நலக் கூட்டணியை சில கட்சிகள் கூறுவது, அது அவர்களின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்றார். அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் மக்கள் நலக் கூட்டணியின் குறிக்கோள்.
நடைபெற்ற அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் திமுகவை விட அதிமுகவை அதிக விமர்சனம் செய்துள்ளோம். மக்கள் நலக் கூட்டணி அதிமுகவின் பி டீம் என்றால் தேமுதிக எப்படி எங்களுடன் இணையும். காழ்ப்புணர்ச்சியோடு பிரச்சாரம் செய்வது அரசியல் நாகரீகமல்ல என்றார்.
சமூக வலைதளங்களில் மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக உடன்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, “விமர்சிக்கப்படுகிறோம் என்றால் நாங்கள் வீரியமாக இருக்கிறோம்’’ என்று அர்த்தம் என்றார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment