குடிபோதையிலிருந்து விடுபட போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள நொளம்பூரில் வசித்து வருபர் குப்புசாமி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு அனுப்ப அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
அதன்படி அவரும் சென்ற ஆண்டே அங்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் வீடு திரும்பினார்.
அதன்பின் மீண்டும் அவரை அந்த மையத்தில் சேர்க்க, அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். ஆனால், அங்கு செல்ல பயந்து அவர் மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும் அவர் குடும்பத்தினர் கேட்கவில்லை. இதனால், மனமுடைந்த குப்புசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அந்த மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள், குப்புசாமியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனவே இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள், அந்த மையத்திற்கு சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அங்கு சிகிச்சை பெறும் 40 பேரிடம் விசாரணை செய்தனர்.
போதை மறுவாழ்வு மையங்களில் இது போன்ற தாக்குதல் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் நிதி உதவி பெற்று நடத்தப்படும் இது போன்ற மறுவாழ்வு மையங்களில், அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
No comments :
Post a Comment