’கட்சிகளை உடைப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை’ - முத்தரசன் பதிலடி
அடுத்தவர் மீது களங்கம் கற்பிப்பதும் கட்சிகளை உடைப்பதும் கருணாநிதிக்கு கை வந்த கலை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முத்தரசன், “அதிமுக-திமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலக் கூட்டணி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மதுரையில் நடந்த மிகப் பிரம்மாண்ட மாநாட்டில் சிபிஎம், சிபிஐ இரண்டு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்ட பேசிய எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் வங்கக் கடலில் தூக்கி வீசுங்கள் என்று தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
எனவே இதில் அகில இந்திய தலைமையோடு ரகசிய பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்தவர் மீது களங்கம் கற்பிப்பதும் கட்சிகளை உடைப்பதும் கருணாநிதிக்கு கை வந்த கலை. அதுவே நிரந்தர குணமும்கூட. ஆனால், திமுக தலைவர் கருணாநிதியின் அந்த நோக்கமும் கனவும் மக்கள் நலக் கூட்டணியால் தகர்ந்து கலைந்து வருகிறது.
அந்த ஆத்திரத்தில் கருணாநிதியின் பேரன்கள் நடத்தி வரும் தினகரன் நாளிதழில் உண்மைக்கு மாறான செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் நடந்து வரும் கிரானைட் கொள்ளையில் திமுக-அதிமுகவுக்கு பங்குள்ளது.
ஆனால், இதற்கு பதில் கூறாமல் கருணாநிதி மவுனம் காப்பது ஏன்? பதில் சொல்ல மறுப்பது ஏன்? துணிச்சல் இருந்தால் பதில் கூறட்டுமே! மக்கள் நலக் கூட்டணியின் 5ஆம் கட்ட பிரச்சாரம் விரைவில் நடைபெறும்.
உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவக் கொலையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் மார்ச் 21 அன்று சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment